பாபர் :
இந்திய வரலாற்றில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தியவர்கள் மொகலாயர்கள். தந்தைவழி தைமூர், தாய்வழி செங்கிஸ்கான் ஆகியோரின் பரம்பரையில் தோன்றியவர் பாபர். இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ள ஃபெர்கானா பகுதியை பாபர் ஆண்டுவந்தார். 12 வயதிலேயே ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவர் அவர். ஃபெர்கானா பள்ளத்தாக்கிலிருந்து கைபர் கணவாயைக் கடந்து இந்தியாவுக்குள் அவர் நுழைந்தார்.
1526-ல் நடைபெற்ற முதல் பானிபட் போரில் இப்ராஹிம் லோதியை அவர் வீழ்த்தினார். போரில் எதிரிப்படையை எல்லா திசைகளிலிருந்தும் சுற்றி வளைத்துத் தாக்கும் முறைக்காக பாபர் புகழ்பெற்றிருந்தார்.
ஹுமாயுன் :
பாபரின் மகன் ஹுமாயுன் பலவீனமானவர் என சொல்லப் பட்டாலும், போர்களிலும் நாடு பிடிப்பதிலும் ஆர்வம் காட்டாத அமைதியான மன்னர். பத்து ஆண்டு ஆட்சி நடத்திய பிறகு ஷெர்ஷா சூரி என்ற மன்னரிடம் ஹுமாயூன் ஆட்சியை இழந்தார். இதனால் நாட்டைவிட்டு வெளியேறி, இரானில் அவர் வாழ்ந்தபோதே அக்பர் பிறந்தார். ஷெர்ஷா சூரி இறந்த நிலையில், மீண்டும் தன் ஆட்சிப்பகுதியை ஹுமாயுன் கைப்பற்றினார். அடுத்த ஓராண்டில் நூலகப் படியிலிருந்து தவறிக் கீழே விழுந்து இறந்தார். இதன் காரணமாக அக்பர், தாத்தா பாபரைப் போல இளம் வயதிலேயே (13 வயதில்) மன்னர் ஆனார்.
அக்பரும் பீர்பாலும் :
மொகலாய மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர் அக்பர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவராக அறியப்பட்டவர். மொகலாயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மதத்தைச் சாராதவர்கள் ‘ஜிஸ்யா' என்ற வரியைச் செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரியை அக்பர் ரத்து செய்தார். அதேபோல சமணர்களின் புனித நாட்களின்போது, இறைச்சிக்காக உயிர்களைக் கொல்வதற்கு தடையைக் கொண்டுவந்தார். இந்து மத வழக்கங்களால் பெரிதும் உத்வேகம் பெற்ற அக்பர், இஸ்லாமிய வழக்கமான தாடி வளர்ப்பதை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. அக்பரின் மந்திரிகளில் ஒருவரான பீர்பாலும் கதைகள் வழியாக நமக்கு நன்கு தெரிந்தவர்தான்.
சமூகமும் கலைகளும் :
மொகலாயர்கள் ஆட்சி சமூகரீதியில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தது. அன்றைக்கு இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு. என்றாலும், ஆட்சி நடத்திய மன்னர்கள் இஸ்லாமியர்களாக இருந்தனர். மற்ற மத நம்பிக்கைகளை அவர்கள் மதித்தனர். மற்ற மதப் பண்பாடுகளை ஊக்குவிப்பதற்கு நிதியும் அளித்தனர்.
மொகலாய அரசர்கள் தங்களுடைய பாரம்பரியமான பெர்சிய-துருக்கியப் பண்பாட்டை, இந்தியப் பண்பாடு-கலைகளுடன் இணைக்கும் பணியை மேற்கொண்டனர். போர்களில் பெரிய ஆர்வம் காட்டாத ஹுமாயுன், கலைகளில் ஆர்வம் காட்டினார். அவர் காலத்தில்தான் பெர்சிய பாணி ஓவியங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய கட்டிடக் கலைக்கு மொகலாயர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தாஜ்மகால்.
1600-ம் ஆண்டு வாக்கில் மொகலாயர்கள் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி அவர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது. அதேநேரம் ஷாஜஹானின் மகன் ஔரங்கசீப் 1707-ல் இறந்ததுடன் மொகலாயர்களி்ன் வீழ்ச்சி ஆரம்பமானது. கடைசி மொகலாய மன்னரான பகதூர் ஷா ஸபர் 1857-ல் ஆங்கிலேயர்களால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அன்றைய பர்மாவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார்.
கோஹினூரும் மயில் சிம்மாசனமும் :
மொகலாய ஆட்சியை நிறுவிய பாபர், முதலில் இப்ராஹிம் லோதியை வீழ்த்தி டெல்லியைக் கைப்பற்றினார். இதற்கிடையே ஆக்ராவைக் கைப்பற்றுவதற்காக தன் மகன் ஹுமாயுனை படையுடன் அனுப்பினார். பானிபட் போரில் ஏற்கெனவே கொல்லப்பட்ட குவாலியர் மகாராஜாவின் மனைவிகள், ஹுமாயுனை வரவேற்றனர். அவரை திருப்திப்படுத்தும் வகையில் தங்கள் விலைமதிப்புமிக்க நகைகளைக் கொண்டுவந்து கொடுத்தனர்.
இந்தியாவின் மிக அரிய வைரமான இளஞ்சிவப்பு நிற கோஹினூர் வைரமும் அவற்றில் ஒன்று. பாரசீக மொழியில் 'மலையிலிருந்து வீசும் ஒளி' என்று இந்தப் பெயருக்கு அர்த்தம். கோஹினூர் வைரத்தின் மதிப்பு என்னவென்றால், உலகிலுள்ள அத்தனை கோடி மக்களுக்கும் இரண்டு நாட்களுக்கு உணவு வழங்கத் தேவையான அளவு பண மதிப்பைக் கொண்டது அது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் இந்த வைரத்தை எடுத்துச் சென்றனர். இந்த அரிய வைரம், பிரிட்டன் அரச வம்சத்தின் கிரீடத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது.
தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான் காலத்தில் உருவாக்கப்பட்ட மயில் சிம்மாசனம் மிகவும் அரிய வேலைப்பாடுகளைக் கொண்டது. மாணிக்கம் (சிவப்பு), நீல மணிக்கல், மரகதக் கல் (பச்சை) போன்ற அரிய கற்களால் அலங்கரிக்கப்பட்ட உலகின் விலைமதிப்பற்ற சிம்மாசனங்களில் அதுவும் ஒன்று. செங்கோட்டையில் இந்த சிம்மாசனம் இருந்தது. 1739-ல் மொகலாயர்கள் மீது போர் தொடுத்து வந்த பெர்சிய மன்னர் நாதிர் ஷா வெற்றியின் அடையாளமாக இதை எடுத்துச் சென்றார்.
No comments:
Post a Comment