Sunday, October 02, 2022

TNPSC G.K - 149 | குஷான பேரரசு.

குஷானர்கள் (கி.பி.30-375) :


மெளரியப்பேரரசுக்கு பின் இந்தியாவில் தோன்றிய இன்னொரு பெரிய பேரரசு குஷானப்பேரரசு. கி.மு.30ல் தோன்றிய பேரரசு கி.பி.230ல் வசுதேவா மறைவிற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி கி.பி. 375ல் கிபுநாடாவிற்கு பின்பு முற்றிலுமாக வீழ்ந்தது. ஹீரோயீஸ் என்பவரே முதல் குஷான அரசர். ஆனால் முதல் அரசராக குஜூலா கட்பீஸஸே குறிப்பிடப்படுகிறார். ஏனெனில் குஜூலா கட்பீஸஸ்(Kujala kadphises) கி.பி.30ல் சிறு சிறு இனக்குழக்களாக இருந்த பழங்குடியினரை இணைத்து குஷானப்பேரரசை ஏற்படுத்தினார். இங்கு பெளத்தம்,இந்து மதம், ஜொராஸ்டிரிய மதங்கள் பின்பற்றப்பட்டன. கிரேக்கம், சமஸ்கிருதம் மொழிகள் பேசப்பட்டது.குஷானப்பேரரசு இன்றைய இந்தியா வின் வடபகுதியில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,சீனா, நேபாளம், தஜிகிஸ்தான்,உஸ்பெஸ்கிஸ்தான் வரை பரந்துபட்டு இருந்தது. தலைநகரங்களாக புருஷபுரம்(தற்போதைய பாகிஸ்தானிலுள்ள பெஷாவர்), மதுரா, தட்சசீலம் ஆகியவை இருந்தது.குஷானர்கள் என்று சொன்னாலே கனிஷ்கர் என்று தான் ஞாபகம் வரும். கனிஷ்கர் என்பதற்கு கடவுளின் குழந்தை என்று பொருள்படும். இந்திய பேரரசர்களாக சிறப்பித்து சொல்லப்படும் வரிசையில் அசோகருக்கு அடுத்து கனிஷ்கர் தான் வருவார். ஏன் இந்த வரிசை? எதனால் இவர் இரண்டாம் அசோகர் என போற்றப்படுகிறார்? அசோகருக்கு பிறகு புத்த மதத்தை மத்திய ஆசியா, சீனா, திபெத், ஜப்பான் வரை பரப்பியவர் கனிஷ்கர். காஷ்மீரில் 4வது புத்தமத மாநாட்டை சிறப்புற நடத்தியவர். அதனால் இரண்டாம் அசோகர்னு அழைக்கப்படுகிறார். காலவரிசைப்படி அடுத்து 7ம்நூற்றாண்டில் ஹர்ஷர் வருவார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பேரரசர் பிறந்தது இன்றைய பாகிஸ்தானின் பெஷாவர். பிறந்த வருடம் கி.பி.78. பட்டத்திற்கு வந்தது கி.பி.127. 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்து கி.பி.150ல் மறைந்தார். கனிஷ்கர் காலத்தில் குஷானப்பேரரசு 38 லட்சம் கி.மீ அளவுக்கு விரிந்து இருந்தது. சீனா வரைக்கும் புத்த பிக்குகளை அனுப்பி புத்த மதத்தை பரப்பினார்.

குஜூலா கட்பீசஸ் கி.பி.30-80 :


இவரே குஷாணர்களின் அரசை தோற்றுவித்தவர். இவரே சிறு சிறு குழுக்களாக இருந்த பழங்குடி இன மக்களை ஒன்றிணைத்து முதன்முதலில் குஷாண அரசை உருவாக்கினார். இவரது வம்சமானது குய்ஷூவாங் (குஷான்) அரசரின் வம்சமாக அழைக்கப்பட்டது.இவர் காபூல் மீது படையெடுத்து அதை கைப்பற்றினார். பின்னர் புடா, கபிலா மற்றும் காந்தாரம் பகுதிகளை கைப்பற்றினார். இவர் இறக்கும்போது இவரது வயது 80க்கு மேல் இருந்ததாக தெரிகிறது. இவருக்கு இரண்டு மகன்கள் வீமா தாக்தோ மற்றும் சதஷ்கனா என்று இருவர் உண்டு.

வீமா தாக்தோ (சதாஷ்கனா) கி.பி 80-95 :


இவர் தந்தைக்கு பின்னர் ஆட்சியேறினார். குஷான பேரரசை தெற்காசியாவின் வடமேற்கு பகுதிகளில் இவர் விரிவுபடுத்தினார். இவரது சகோதரர் சதாஷ்கனாவின் பெயர் ஒடியின் மன்னரான சேனவர்மனின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீமா காட்பீசஸ் கி.பி 95-127 :


முதன்முதலில் இவர் வெளியிட்ட தங்க நாணயங்களின் மூலமே குஷாண பேரரசை பற்றி அறியமுடிகிறது. இவர் வீமா தாக்தோவின் சகோதரனான சதாஷ்கனாவின் மகன் .இவர் தனது ஆட்சியில் பாக்டீரியாவை தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஆக்கினார். இவரது மகனே கனிஷ்கர். இவரது ஆட்சியில் மத்திய ஆசியாவில் பேசப்பட்டு வந்த பாக்டீரியா மொழியில் நாணயங்களை வெளியிட்டார். இவர் இந்து சமயத்தை ஆதரித்தார்.

கனிஷ்கா கி.பி 127-150 :


குஷாண வம்சத்து அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர் இவரே. இவரது தந்தையான வீமா காட்பீசஸ்க்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். கனிஷ்கர் மத்திய ஆசியாவின் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் இன்றைய பாகிஸ்தான் பகுதிகளை வென்று தன்னுடைய ஆட்சியை விரிவுபடுத்தினார். இந்தியாவில் குஜராத் பாடலிபுத்திரம் மற்றும் பஞ்சாப் வரை தன்னுடைய ஆட்சியை விரிவுபடுத்தினார். இவரது ஆட்சியின் தலைநகராக இன்று பாகிஸ்தானில் பெஷாவர் என்று புருஷபுரம் இருந்தது. இரண்டாவது தலைநகராக மதுரா நகரம் இருந்தது. இவர் பெளத்த மதத்தை ஆதரித்து பரப்பினார். தற்கால பாகிஸ்தானில் பெஷாவர் நகருக்கு அருகில் "சாஜி கி தேரி" என்னுமிடத்தில் அமைத்த புத்த ஸ்தூபி கனிஷ்கரின் ஸ்தூபி என்று அழைக்கப்பட்டது. 400 அடி உயரமுள்ள இந்த ஸ்தூபி தற்போது உருக்குலைந்து உள்ளது. இந்த ஸ்தூபிக்கு அருகில் அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த பெளத்த மத சின்னங்கள் அடங்கிய பேழை "கனிஷ்கர் பேழை" என்று அழைக்கப்படுகிறது. இவர் காந்தாரம் (கந்தஹார்) வழியாக மத்திய கிழக்கு ஆசிய பகுதிகளுக்கும் சீனாவிற்கும் புத்த மத துறவிகளை அனுப்பி பெளத்த மதத்தை பரப்பினார். இவரது ஆட்சி காலத்தில் பரப்பப்பட்ட பெளத்த மதமே இன்று சீனாவின் முக்கிய மதமாக உள்ளது. இதனால் தான் இவர் "இரண்டாம் அசோகர்" என்று பெளத்தர்களால் அழைக்கப்படுகிறார்.

ஹூவிஷ்கா (கி.பி. 150-180) :


இவர் கனிஷ்கரின் மரணத்திற்கு பின்னர் ஆட்சியேறிய குஷான பேரரசர். இவர் கனிஷ்கரின் மகன்.இவருடைய ஆட்சி குஷான ஆட்சியின் பொற்காலம் என்று அறியப்படுகிறது.இவர் மகாயான புத்த மதத்தை பின்பற்றினார். இவரது ஆட்சி பாக்டீரியா முதல் இந்தியாவில் மதுரா வரை இருந்தது. பாடலிபுத்திரம் மற்றும் புத்த கயாவில் இவரது உருவம் பொறித்த தங்க காசுகளும் தாயத்துகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவரது நாணயங்களில் ரோம மற்றும் ஈரானிய தெய்வங்கள் இடம்பெற்றிருப்பதிலிருந்து அவர்களுடன் வர்த்தக தொடர்புகளை இவர் ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் தனது நாணயங்களில் சிவன், முருகன் மற்றும் பார்வதி உருவங்களையும் சேர்த்தார். மற்ற குசான ஆட்சியாளர்களை விட இவரது ஆட்சிகால தங்க நாணயங்களே அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது. இவர் தனது நாணயங்களின் எடையை 16 கிராம் அளவிலிருந்து 10-11 கிராமாக குறைத்தது பணவீக்கத்தினால் நாணய மதிப்பிழப்பு ஏற்ப்டடது என்று நம்பப்படுகிறது. இவரது ஆட்சி அமைதியான முறையில் 30 ஆண்டுகள் நீடித்ததாக தெரிகிறது.

முதலாம் வசுதேவன் கி.பி 190-225 :


இவரது ஆட்சி வட இந்திய பகுதிகள் மற்றும் மத்திய ஆசியா வரை பரவியிருந்தது. இவர் இன்றைய ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கு (பாக்டீரியா) நகரிலிருந்து நாணயங்கள் வெளியிட்டார். இவரது ஆட்சியில் வடமேற்கில் சாசானியர்களின் எழுச்சியையும் படையெடுப்புகளையும் சமாளிக்க வேண்டி இருந்தது. இவர் சீன பேரரசர் காவ் ரூயிக்கு நட்பு ரீதியாக காணிக்கை அனுப்பியதாக சீன வரலாற்று நாளோடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய ஆசியாவிலிருந்து சீனா பின்வாங்கும் நேரத்தில் அந்த இடத்தின் அதிகாரத்தை இவர் கைப்பற்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவரது நாணயங்கள் தங்கத்தில் தினார், கால் தினார் மற்றும் செப்பு நாணயங்களாக இருந்தது. இவரது அனைத்து நாணயங்களிலும் கடவுளான சிவனின் அடையாளம் உள்ளது. சாசானியர்களின் படையெடுப்பால் பாக்டீரியாவின் பிரதேசத்தை இவர் இழந்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வுக்கு பிறகு குஷாணர்களின் ஆட்சி மேற்கு மற்றும் மத்திய பஞ்சாப்புடன் நிறுத்தப்பட்டது. இவரது ஆட்சியில் கலைப்படைப்புகள் அதிகரித்தன. பல பெளத்த சிலைகள் இவரது ஆட்சியில் தான் அமைக்கப்பட்டது.

இரண்டாம் கனிஷ்கா (கி.பி.225-245) :


இவர் முதலாம் வாசுதேவாவிற்கு பிறகு ஆட்சி பொறுப்புக்கு வந்தார். இவர் வட இந்தியாவில் தனது ஆட்சியை நிலைநிறுத்திய போது பேரரசின் மேற்கு பகுதியை (பாக்டீரியா) சாசானிய அரசரிடம் இழந்திருக்க கூடும் என்று தெரிகிறது. சாமானியர்களின் கல்வெட்டுகளிலிருந்து இவர் புருஷபுரம் (பெஷாவர்) வரையிலான ஆட்சியை கட்டுப்படுத்தியதாக தெரிகிறது. இவர் ஒரு கட்டத்தில் காந்தாரத்தையும் கபிலாவையும் மீண்டும் கைப்பற்றியிருக்கலாம் என்ற கருத்துகளும் உள்ளது.

வசிஷ்கா (கி.பி. 245-265) :


இவர் இரண்டாம் கனிஷ்காவிற்கு பின்னர் குஷான அரசரானவர். பஞ்சாப், மதுரா ஆகிய பகுதிகளில் இவரது கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது ஆட்சி தெற்கே சாஞ்சி வரை இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிந்து பகுதியில் உள்ள கரோஷ்டி கல்வெட்டில் இவரை பற்றிய தகவல்கள் உள்ளது. மதுராவின் கலை படைப்புகளிலிருந்து வசிஷ்கன் என்ற பெயருடன் பல சிலை துண்டுகள் சாஞ்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது காலத்தில் தங்க நாணயங்கள் முந்தையவர்களை விட அளவில் சிறியதாக ஆயிற்று.

மூன்றாம் கனிஷ்கா (கி.பி.265-270) :


இவர் வசிஷ்காவிற்கு பின் வந்த அவரின் மகன். இவரது ஆட்சி வடமேற்கு இந்திய பகுதிகள் என்ற அளவில் இருந்தது. குறைந்த காலமே ஆட்சியில் இருந்தார். பஞ்சாப்பில் ஆரா ஆற்றின் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் இவர் தன்னை "மகாராஜா ராஜாதி ராஜா தேவபுத்திர கைசர கனிஷ்கா" என்று அறிவித்து கொண்டு வசிஷ்கன் (என்ற) வஜேஷ்காவின் மகன் என்று தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

இரண்டாம் வாசுதேவா (கி.பி.270-300) :


மூன்றாம் கனிஷ்கருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவர் அவரின் மகனாக இருக்கலாம். இவர் குப்த பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள தக்சசீல பகுதிகளின் ஆட்சியாளராக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குஷான பேரரசு இவர் காலத்தில் குறுக ஆரம்பித்தது. இவரது ஆட்சியில் மதுராவை இழந்து குப்தர்களின் கீழ் ஆட்சியாளராக தொடர்ந்து இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மஹி (கி.பி.300-305) :


இவரும் குப்தர்களின் கீழ் ஆட்சியாளராக தொடர்ந்தார்.இவர் சமுத்திரகுப்தரின் கீழ் தக்ஷசீல பகுதியிலுள்ள காந்தாரத்தின் ஆட்சியாளராக இருந்தார். இவரது நாணயங்களின் மதிப்பு மிகவும் குறைக்கப்பட்டது.

ஷாகா (கி.பி.305-335) :


இவர் முந்தைய ஆட்சியாளர் மஹியின் மகன். பலர் இவர் பெயரான ஷாகா என்பதை ஆட்சியாளர் பெயராக நினைக்கவில்லை. நாணயங்களில் ஷாகா-குஷான் என்ற சொல்லை பயன்படுத்தியதால் நாணயங்களை அடையாளப்படுத்தும் பெயராக கருதுகின்றனர். இவரது பெயரானது சமுத்திர குப்தரின் புகழ்பெற்ற அலகாபாத் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபுநாடா (கி.பி.335-375) :


இவரே கடைசி குஷான அரசராக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர் ஷாகாவிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார். இவர் தக்ஷ்சீல பகுதியின் உள்ளூர் ஆட்சியாளராக குப்த பேரரசிற்கு உட்பட்ட அரசராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் கிடாரைட்டுகளிடம் தனது ஆட்சியை இழந்திருக்கலாம் என்று தெரிகிறது.மேற்கிலிருந்து ஸஸீனியர்கள் மற்றும் கிடாரைட்டுகள் (இன்றைய இரான்,இராக் பகுதியிலுள்ள பண்டைய அரசு) ஆகியோரின் படையெடுப்புகளால் ஏற்கனவே குப்த பேரரசால் நலிவுற்று சிற்றரசாக இருந்த குஷானப்பேரரசு முடிவுக்கு வந்தது.

No comments:

Popular Posts