மாணவர்களுக்கு சிற்பி திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
சிற்பி திட்டம் ரூ.4.25 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.9.2021 அன்று சட்டசபையில் அறிவித்தார். காவல்துறையுடன் மாணவர்களின் நெருக்கத்தை வளர்த்து அவர்களை சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயமாக மாற்றுவது; பயங்கரவாதம், வகுப்புவாதம், போதை பழக்கம், குடிப்பழக்கத்துக்கு எதிரான மாணவர்களாக உருவாக்குவது; இயற்கையை நேசித்து பாதுகாப்பும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாகும். பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் இது வழிகாட்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள், யோகா போன்றவையும் கற்றுக்கொடுக்கப்படும்.
மேலும், குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதற்கான முக்கிய காரணங்களான, குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை, ஆதரவற்ற நிலை, வேலைவாய்ப்பின்மை ஆகிய அவலங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து, அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
தான் கற்ற கல்வியையும், ஒழுக்கத்தையும் பிறருக்கு கற்றுக்கொடுக்கும் அளவுக்கு அவர்களை வளர்ப்பதற்கு ஒரு வழிகாட்டியாக, காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவாக சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சென்னையில் உள்ள 100 அரசு பள்ளிகளில் தலா 50 மாணவர்கள் சுய விருப்பத்தின்படி தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு சமுதாய பிரச்சினைகளை களைவது தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுய ஆளுமைத்திறனை மேம்படுத்துவது, இளம் வயதிலேயே போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் மனநிலையை கொண்டுவருவது, தேசிய சின்னங்களை மதிப்பது ஆகியவை கற்றுத்தரப்படும்.
தற்போது சிற்பி திட்டத்தில் 100 பள்ளிகளில் இருந்து 8-ம் வகுப்பு படிக்கும் 2,764 மாணவர்கள், 2,236 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஒருங்கிணைப்பு அதிகாரி முன்னிலையில் சிற்பி மாணவ, மாணவிகள் கூடுவார்கள். அவர்களுக்கான வகுப்புகளை போலீஸ் அதிகாரிகள், நிபுணர்கள் நடத்துவார்கள்.
அவர்களுக்கான புத்தகம் வழங்கப்படும். வகுப்பு நடக்கும் நேரத்தில் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்கு சிற்பி மாணவ, மாணவிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு, கல்வி, வரலாறு, பொது அறிவு குறித்து எடுத்துரைக்கப்படும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக, விளையாட்டு பயிற்சி, உடற்பயிற்சி, கவாத்து ஆகியவையும் கற்றுக்கொடுக்கப்படும்.
கண்டுகளித்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நல்ல அனுபவங்கள் குறித்து பிறருக்கு கற்றுத்தருதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க சிற்பி சிறப்பு வகுப்புகள் உதவும். அவசர உதவி மையங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், சென்னை காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும். மொத்தத்தில் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்திலும் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதே சிற்பி திட்டத்தின் நோக்கமாகும்.
No comments:
Post a Comment