கோதை நாயகி அம்மாள்- (1931-ல் மதுவிலக்குக்கு போராடி சிறை சென்றவர்)
தேசபக்தி மற்றும் விதவை மறுமணம் போன்ற சமூக பிரச்சினைகளில் தனது கருத்துகளை நாவல்கள் மூலம் பிரசாரம் செய்தார். பிரபலமான தலைவர்களுடன் பல அரசியல் கூட்டங்களில் பங்கேற்றதன் மூலம் அவரது நேர்த்தி, பொது பேச்சுகளில் நன்கு அறியப்பட்டது. பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக சிறுகதைகளுடன் தனது உரைகளை இடையிடையே எடுத்து சொல்வார். தீரர் சத்தியமூர்த்தி, காமராஜர் போன்ற தலைவர்களால் முன்னணி பேச்சாளராக சேர்க்கப்பட்டார். கோதை நாயகி பேச்சுத் திறமையால், ராஜாஜி கவரப்பட்டார்.கோதை நாயகி பாடல்களுக்கு சிறந்த ரசிகர் மகாகவி பாரதியார்.
பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், பாடகர் மற்றும் நாடக ஆசிரியராக இருந் ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர போராட்ட வீரரா கவும் கோதை இருந்தார். 1925-ல் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரிபாய் ஆகியோரை சந்தித்தார். மகாத்மாவின் எளிமை மற்றும் அவரது சக்திவாய்ந்த சொற்பொழிவு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட கோதை நாயகி, ஆடம்பர வாழ்க்கையின் மீதான தனது ஆர்வத்தை துறந்து, பட்டு ஆடைகள் மற்றும் தங்க மற்றும் வைர நகைகளை களைந்து, காதி சேலைகளை மட்டுமே அணியத்தொடங்கினார்.
அம்புஜம்மாள், ருக்மணி லட்சுமிபதி மற்றும் வசுமதி ராமசாமி ஆகியோருடன் சமூகசேவை நடவடிக்கைகளில் மூழ்கினார். 1931-ம் ஆண்டு மகாத்மாவின் அழைப்பை ஏற்று, சாராயக்கடைகளுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, 6 மாத சிறை தண்டனையை, 8 மாதங்களாக பெற்றார். நீதிமன்றத்தால் 1932-ல் லோடி கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காகவும், வெளிநாட்டு ஆடை களை புறக்கணித்ததற்காகவும் மீண்டும் தண்டிக்கப்பட்டார்.
சாதி, மத வேறுபாடின்றி ஏழைப்பெண்களின் பிரசவத்துக்கு இலவசமாக உதவி செய்து வந்தார். 1948-ம் ஆண்டு, மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு அவரது நினைவாக “மகாத்மாஜி சேவா சங்கம்” என்ற பெயரில், ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக, ஒரு சங்கத்தை தொடங்கினார். அப்போதைய அரசு அவரது பொது சேவை மனப்பான்மை மற்றும் தேசபக்தியை அங்கீகரிக்கும் வகையில் 10 ஏக்கர் நிலத்தை வழங்கியபோது, அவர் 10 ஏக்கர் நிலத்தையும், “ஸ்ரீ வினோபாபாவே”க்கு, அவரது பூமிதான இயக்கத்துக்காக வழங்கினார்.
No comments:
Post a Comment