Tuesday, November 30, 2021

CURRENT AFFAIRS NOVEMBER 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021

CURRENT AFFAIRS NOVEMBER 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021


❇️ நவம்பர் 1: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


❇️ நவம்பர் 1: இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசியை அங்கீகரித்து, அவசர பயன்பாட்டுப் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்தது.


❇️ நவம்பர் 3: தற்போது விதிக்கப்பட்டுவரும் கலால் வரியிலிருந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.


❇️ நவம்பர் 3: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2023 உலகக் கோப்பை வரை இப்பொறுப்பில் அவர் இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.


❇️ நவம்பர் 4: விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு இந்திய விமானப் படை குரூப் கேப்டனாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


❇️ நவம்பர் 5: தாம்பரம் பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்தது.


❇️ நவம்பர் 6: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கான (ஐஓசி) உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தின் தேர்வுக் குழுவில் இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா இடம் பெற்றார்.


❇️ நவம்பர் 7: இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் நவம்பர் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதையொட்டி, புதிய தளபதியாக ஆர்.ஹரிகுமார் நியமிக்கப்பட்டார்.


❇️ நவம்பர் 8: விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற வரலாற்றை வாங் யாபிங் (41) படைத்தார். விண்வெளி நிலைய கட்டமைப்புப் பணிக்காக விண்வெளியில் நடந்து இச்சாதனையைப் புரிந்தார்.


❇️ நவம்பர் 8: யுனெஸ்கோ அமைப்பின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகர் இணைந்தது. உலகம் முழுவதும் 49 நகரங்கள் இப்பட்டியலில் உள்ளன.


❇️ நவம்பர் 9: குளிர்பதன பெட்டியில் வைக்க அவசியமில்லாத புதிய கரோனா தடுப்பூசியை அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கியுள்ளனர். அறை வெப்பநிலையில் 7 நாட்கள் வரை வைத்து இதைப் பயன்படுத்தலாம்.


❇️ நவம்பர் 9: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.


❇️ நவம்பர் 9: ஈஃபிள் கோபுரம் அளவிலான ‘4660 நெரியஸ்’ என்று பெயரிடப்பட்ட குறுங்கோள் டிசம்பர் மாதத்தில் புவியை நோக்கி நகரும் என்று அமெரிக்காவின் நாசா அறிவித்தது.


❇️ நவம்பர் 10: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை அடுத்து இப்பொறுப்புக்கு அவர் நியமிக்கப்பட்டார்.


❇️ நவம்பர் 10,11: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்தும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.


❇️ நவம்பர் 11: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக பெய்த மழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடானது.


❇️ நவம்பர் 12: சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் போலந்தில் நடைபெற்ற பிரசிடெண்ட்ஸ் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றது.


❇️ நவம்பர் 14: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற எட்டாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதன்முறையாகக் கோப்பையை வென்றது.


❇️ நவம்பர் 15: உலகில் 60 சதவீத வருவாய் உள்ள 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம் பிடித்தது.


❇️ நவம்பர் 16: 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக மேற்கிந்திய தீவுகளுடன் இணைந்து அமெரிக்கா நடத்துகிறது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு 2025இல் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறுகிறது. 2024 - 2031 காலகட்டத்தில் இந்தியா மூன்று ஐசிசி தொடர்களை நடத்த உள்ளது.


❇️ நவம்பர் 17: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்கும் வரை அப்பொறுப்பை மூத்த நீதிபதி துரைசாமி வகிப்பார் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.


❇️ நவம்பர் 17-18: இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் அனைத்திந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. அனைத்திந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நூற்றாண்டைக் கொண்டாடும்விதமாக இம்மாநாடு நடைபெற்றது.


❇️ நவம்பர் 18: தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்டம் விளையாட்டைச் சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


❇️ நவம்பர் 18: மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


❇️ நவம்பர் 19: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.


❇️ நவம்பர் 19: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முழு உடல் பரிசோதனையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால், சில மணி நேரங்களுக்குத் தற்காலிக அதிபர் பொறுப்பை கமலா ஹாரிஸ் ஏற்றார். அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் அதிபர் அதிகாரங்களை ஏற்றது இதுவே முதன்முறை.


❇️ நவம்பர் 19: 580 ஆண்டுகளுக்குப் பின்பு வானில் நீண்ட சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இதற்கு முன்பு நீண்ட சந்திர கிரகணம் 1440ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று நிகழ்ந்தது.


❇️ நவம்பர் 20: அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசன் நியமிக்கப்பட்டார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் அவர் இருப்பார்.


❇️ நவம்பர் 21: இந்தியாவில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள தூய்மை நகரங்களின் பட்டியலில் ஐந்தாவது முறையாக இந்தூர் முதலிடம் பிடித்தது.


❇️ நவம்பர் 22: டெல்லியில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகத்தைத் தோற்கடித்து தமிழ்நாடு சாம்பியன் ஆனது. தொடர்ச்சியாக இரு முறை இந்தக் கோப்பையை தமிழ்நாடு வென்றுள்ளது.


❇️ நவம்பர் 23: கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் பெயரில் ‘வங்கி’ என்கிற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட வங்கி ஒழுங்குமுறைச் சட்டம்-2020 செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது.


❇️ நவம்பர் 24: வேற்றுருவம் அடைந்த பி.1.1.529 என்கிற கரோனா வைரஸ் தொற்று தென் ஆப்பிரிகாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.


❇️ நவம்பர் 25: யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் குழுவின் உறுப்பினராக ஆசியா-பசிபிக் பிராந்தியத்திலிருந்து இந்தியா தேர்வானது. இப்பொறுப்பில் நான்கு ஆண்டுகளுக்கு இந்தியா இருக்கும்.


❇️ நவம்பர் 26: சர்வதேசக் காவல் அமைப்பான ‘இன்டர்போலி’ல் ஆசிய நாடுகளின் பிரதிநிதியாக இந்தியாவின் சார்பில் சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீண் சின்ஹா தேர்வானார்.


❇️ நவம்பர் 26: கரோனா வைரஸ் தடுப்புக்கு மூக்கு வழியாக மருந்தைச் செலுத்தும் ஸ்பிரேயை இந்தியாவின் ஐ.டி.சி. நிறுவனம் தயாரித்துள்ளது.


❇️ நவம்பர் 27: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தேசிய பலபரிமாண குறியீட்டு அறிக்கையில், 51.91 சதவீத ஏழை மக்களுடன் பிஹார் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


❇️ நவம்பர் 28: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை (417) பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார் ரவிச்சந்திரன் அஸ்வின் (418). முதலிடத்தில் அனில் கும்ப்ளே (619) உள்ளார்.


❇️ நவம்பர் 28: கோவாவில் நடந்த 52-வதுசர்வதேசத் திரைப்பட விழாவில், இந்தியாவில் சினிமா படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தர பிரதேசம் மாநிலம் தேர்வானது.


❇️ நவம்பர் 29: கரீபியன் கடலில் மேற்கிந்தியத் தீவுப் பிராந்தியத்தில் உள்ள பார்படாஸ், பிரிட்டன் ஆளுகையிலிருந்து விலகி புதிய குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது.


❇️ நவம்பர் 30: ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார்.


No comments:

Popular Posts