அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவுடன் அதன் தலைவர் அம்பேத்கர்
சட்ட தினம் உணர்த்தும் கடமைகள்! சட்ட தின உறுதிமொழி என்பது வெறும் சடங்காக மாறிவிடக் கூடாது கே.சந்துரு இந்திய சட்ட வரலாற்றில் 26.11.1949 என்ற தேதி முக்கிய தேதியாகும். அந்த நாளில்தான் அரசமைப்புச் சட்ட இறுதி வடிவத்தினை, அரசமைப்புச் சட்டப்பேரவை தீர்மானமாக நிறைவேற்றிய நாள். 67 ஆண்டுகளுக்குப் பின்னர், சட்ட தினத்தைக் கொண்டாடிவரும் நாம், கடந்து வந்த பாதையை நினைவுகூர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் காலனி ஆதிக்கத்தில் சுரண்டப்பட்டுவந்த மக்களுக்குக் கிடைத்த அரசியல் சுதந்திரம், அதையொட்டி உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கு என்றே எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம், அதை உருவாக்கிய தலைசிறந்த சட்ட மேதைகளின் குழு, அக்குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் வீற்றிருந்தது போன்றவற்றையெல்லாம் நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவரான அம்பேத்கர், உறுப்பினர்களின் ஓட்டெடுப்புக்கு விடும் முன்னர் தீர்மானத்துக்கு ஆதரவாக ஆற்றிய சரித்திரப் புகழ்பெற்ற உரையின் ஒரு பகுதி:- "1950 ஜனவரி 26-ம் தேதியன்று, நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கையில் நுழையப் போகிறோம். அரசியலில் நமக்குச் சமத்துவம் இருக்கும். ஆனால், சமூக, பொருளாதாரத் தளத்தில் - சமத்துவமற்ற தன்மையே நீடிக்கும். அரசியலில் நாம் 'ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒருநெறி' என்பதை அங்கீகரிப்போம். ஆனால், நமது சமூக, பொருளாதார வாழ்க்கையில், நம்முடைய பொருளாதார, சமூக அமைப்பின் காரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு நெறி என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து மறுத்துவருவோம். இதுபோன்ற முரண்பட்ட வாழ்க்கை முறை களுடன் நாம் எவ்வளவு காலம் வாழப் போகிறோம்? நம்முடைய சமூக, பொருளாதார வாழ்க்கையில் இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் சமத்துவத்தை மறுக்கப்போகிறோம்? இப்படித் தொடர்ந்து மறுத்துவருவதன் மூலம் அரசியல் ஜனநாயகத்துக்குப் பேரிடர் மட்டுமே விளைவிப்போம். இம்முரண்பாடுகளை நாம் முடிந்த வரை குறைவான காலத்துக்குள் களைந்திட வேண்டும். இல்லையெனில், சமத்துவமின்மையால் அல்லலுறும் மக்களால் இம்மன்றம் மிகுந்த சிரமங்களுக்கிடையே கட்டியுள்ள அரசியல் ஜனநாயகமே தகர்க்கப் பட்டுவிடும்." சோஷலிசம் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாகி, உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெற்ற அச்சட்டத்தின் ஆரம்ப வடிவில் சோஷலிசம் என்ற வார்த்தை எங்கேயும் பயன்படுத்தப் படவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத் தின் பல பகுதிகளில் சோஷலிசக் கூறுகள் எதிரொலித்தன. சட்டப் பிரிவு 39 நிறைவேற்றப் பட்டிருந்தால், முழுமையான சோஷலிச நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும். அப்பிரிவில் அரசை வழிகாட்டும் நெறிமுறைகளாகக் கூறப்பட்டிருப்பவையாவன: "பொருளாதாரச் சுரண்டலுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், சமத்துவமின்மைக்கும் முடிவு கட்டி, நியாயமான சமூக அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய கடமையை அரசின் மேல் சுமத்துகிறது. "மக்கள் அனைவருக்கும் சமூக-பொருளாதார அரசியல் நீதி கிடைக்கக் கூடியதான சமுதாய அமைப்பினை உருவாக்கி, நல அரசை உருவாக்க அரசாங்கம் முயல வேண்டும். தேசிய வாழ்வின் அனைத்து ஸ்தாபனங்களிலும் அவ்வுணர்வு பரவ வகை செய்ய வேண்டும் என்று நெறிமுறைக் கோட்பாடுகளின் அடித்தளமாக விளங்கும். ஆண்-பெண் உள்ளிட்ட அனைத்துத் தொழி லாளர்களின் ஆரோக்கியமும் பலமும் சிறாரின் இளம்பிராயமும் தவறாகப் பயன்படுத்தாம லும், பொருளாதாரத் தேவைகளின் காரண மாகக் குடிமக்கள் தமது வயதுக்கும், வலுவுக்கும் பொருத்தமில்லாத வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படாமலும்; சிறாரும் இளைஞரும் சுரண்டப்படாமல் காக்குமாறும் அரசு தன்னுடைய கொள்கைளை நெறிப்படுத்த வேண்டும்." சோஷலிசக் கருத்துகள் முழுவதிலும் பொதிந்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் அக்கருத்தை மேலும் வலியுறுத்துவதற்காக 1977-ல் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன்படி இந்தியா இறையாண்மை பெற்ற சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. அந்த முகப்பு வார்த்தைகள் நான்கும் இந்தியாவைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களென்று கூறலாம். இதில் ஒரு தூண் பழுதுபட்டாலும் 120 கோடி மக்களைத் தாங்கி நிற்கும் அவ்வமைப்பு தகர்ந்துவிடும் ஆபத்து உள்ளது. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 66 ஆண்டுகள் ஆன பின்னரும், இந்த நான்கு தூண்களும் பலவிதத்தில் தாக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம் எதிர்கொள்ளும் ஆபத்துகள் 1975-77-ல் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைப் பிரகடனம், அரசமைப்புச் சட்டத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கியது. பாபர் மசூதி இடிப்பும், இந்துத்துவத்தின் ஆட்சி என்ற பரப்புரையும் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு வேட்டுவைத்துள்ளன. தனியார்மயமாக்கலும், உலகமயமாக்கலும் அரசமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள சோஷலிசக் கோட்பாடுகளுக்கு ஆபத்து விளைவிக்கின்றன. திருத்தப்படும் தொழிலாளர் சட்டங்கள் இதற்குச் சரியான உதாரணங்களாகும். தொழிலாளர் சட்டம் திருத்துவதற்கு முன்னாலேயே தனியார் மயமாக்கலை வரவேற்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், அதன் சில நீதிபதிகளின் தனிப் பட்ட கருத்துகளும் சோஷலிச அணுகுமுறை யைக் கேலிக்கூத்தாக்கிவிட்டன. சட்ட நாளை அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், அம்பேத் கரின் 125-வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் உத்தரவிட்ட மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகள், நம்மைக் கவலைக்குள்ளாக்குகின்றன. "இந்தியா சோஷ லிச நாடு என்பதெல்லாம் வெற்று முழக்கம். இது ஒரு முதலாளித்துவ நாடு. எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படை இக்கருத்தை ஒட்டியே இருக்க வேண்டும்" என்று ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது வேதனையளிக்கிறது. கட்டாய இலவசக் கல்வி என்பது அடிப்படை உரிமையா என்ற கேள்வி அரை நூற்றாண்டு காலம் நீதிமன்றங்களில் எழுப்பப்பட்டு வந்தது. அதற்கெல்லாம் முடிவுகட்டும் விதமாக 2002-ல் அரசமைப்புச் சட்டம் மேலும் ஒரு முறை திருத்தப்பட்டு, 21-A என்ற பிரிவு கொண்டுவரப்பட்டது. அதன்படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது. ஆனால், அதற்கான சட்டமோ பத்து வருடங்களுக்குப் பின்னால் உருவாக்கப்பட்டது. புதிய சட்டத்தின்படி (2012) அரசு அக்கடமையை நிறைவேற்றும் பொறுப்பைத் தனியார்களுக்கும் தாரை வார்த்தது. 20 நூற்றாண்டுகளாகக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட பகுதியினருக்குப் புதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கு முன்னரே அச்சட்டத்தின் பிரிவுகள் குற்றுயிராக்கப்பட்டன. இன்று தமிழகத்தில் 42% மாணவர்கள், கட்டணம் செலுத்தியே பள்ளிக் கல்வியைப் பயின்றுவருவதைப் பார்க்கும்போது, சட்டத் தின் அடிப்படைக்கும் சமுதாயத்தின் செயல் பாடுகளுக்கும் எட்டாத இடைவெளிதான் தெரி கிறது. புதிய நூற்றாண்டு தொடங்கிய பின்னரும், இந்நாட்டில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு சமநீதி மறுக்கப்பட்டுவருவதையும், இன்னும் உலர்கழிவுகளைத் தலையில் சுமப்பது ஒரு பகுதியினரின் வேலையாக்கப்பட்டிருப்பதை யும், பெரும்பான்மையான மக்கள் இன்ன மும் வறுமைக்கோட்டின் கீழ் வாடிவருவதை யும் பார்க்கும்போது, கூரையே வானமாக்கிக் கொண்டு குடியிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களைக் காணும்போது, முன்னர் கூறிய டாக்டர் அம்பேத்கரின் கூற்றுகள்தான் மேலும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. சட்ட தின உறுதிமொழி என்பது சடங்காக மாறிவிடாமல், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் நடை முறைப்படுத்தப்பட வேண்டும். நெறிகாட்டு வழிமுறைகள் சட்ட உரிமைகளாக மாற்றப்பட வேண்டும். பொது சிவில் சட்டம் என்று ஓயாமல் குரலெழுப்பும் காவிக் கட்சியினர், அரசமைப்புச் சட்டத்தின் மற்ற பகுதிகளை வசதியாக மறந்துவிட்டது ஏனோ? - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை. சோஷலிசக் கருத்துகள் முழுவதிலும் பொதிந்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் அக்கருத்தை மேலும் வலியுறுத்துவதற்காக 1977-ல் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன்படி இந்தியா இறையாண்மை பெற்ற சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. அந்த முகப்பு வார்த்தைகள் நான்கும் இந்தியாவைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களென்று கூறலாம். இதில் ஒரு தூண் பழுதுபட்டாலும் 120 கோடி மக்களைத் தாங்கி நிற்கும் அவ்வமைப்பு தகர்ந்துவிடும் ஆபத்து உள்ளது!
No comments:
Post a Comment