Wednesday, March 26, 2014

கிரிகோர் மெண்டல் | ஆஸ்திரிய ஆராய்ச்சியாளர்

கிரிகோர் மெண்டல் | ஆஸ்திரிய ஆராய்ச்சியாளர் 

>> மரபியலின் தந்தை என்று போற்றப்படும் ஆஸ்திரிய ஆராய்ச்சியாளரும், தாவரவியலாளருமான கிரிகோர் யோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) பிறந்த தினம் இன்று (ஜூலை 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: 

>> ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் (இன்றைய செக் குடியரசு) ஏழை விவசாயக் குடும்பத்தில் (1822) பிறந்தார். பெற்றோரும் சகோதரியும் இவரது படிப்புச் செலவுக்காகக் கடுமையாக உழைத்தனர். 

>> இவரும் தோட்ட வேலை உள்ளிட்ட வேலைகள் மூலம் வருமானம் ஈட்டினார். படிப்பிலும் சிறந்து விளங்கினார். 1843-ல் ஒரு மடாலயத்தில் மதக்கல்வி பயின்று பாதிரியார் ஆனார். மடாலய அதிகாரி உதவியுடன், வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதம், அறிவியல் பயின்றார். 

>> ஒரு பள்ளியில் இயற்கை அறிவியல் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். இயற்கையை, தாவரங்களை மிகவும் நேசித்தார். ‘ஒரே குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகள் ஏன் ஒரே சாயலாக உள்ளன? ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் ஏன் ஒரே மாதிரி உள்ளன?’ என்பது போன்ற கேள்விகள் சிறுவயதிலேயே இவருக்குள் எழுந்தன. 

>> இவை குறித்து ஆராய முடிவெடுத்தார். மடத்தின் தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபுப் பண்புகளை ஆராய்ந்தார். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மடத்தின் ஊழியர்கள் இவரது ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்தனர். 

>> குட்டையான - உயரமான செடிகளை இனக்கலப்பு செய்து வளர்த் தார். தன் ஆராய்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் கவனமாகப் பதிவு செய்தார். புதிய செடிகளின் உயரம், இலைகளின் தோற்றம், பூக்களின் நிறம், விதைகளின் வீரியம், செடிகளின் ஆரோக்கியம் ஆகிவற்றை கூர்ந்து கவனித்து புள்ளி விவரங்களை சேகரித்தார். இதற்காக 8 ஆண்டுகள் பாடுபட்டு, 28,000 செடிகளை வளர்த்தார். 

>> செடிகளின் நிறம், தோற்றம், உயரம் ஆகிய குணாம்சங்களில், மரபியல் கூறுகள் என்ற அடிப்படை அலகுகள் இருப்பதை அறிந்தார். மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுவதைக் கண்டறிந்தார். 

>> இவற்றை விளக்க 2 விதிகளை உருவாக்கினார். இவை ‘மெண்டலின் விதிகள்’ எனப்படுகின்றன. பொஹீமியாவில் உள்ள ப்ரன் இயற்கை வரலாற்று சங்கத்தில் 1865-ல் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். 3 ஆண்டுகள் கழித்து மற்றொரு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். 

>> உயிரினங்கள் அனைத்திலும் மரபுத் தொடர்ச்சி உள்ளது. அதற்கு மரபணுக்கள்தான் காரணம். வீரியம் அதிகம் உள்ள மரபுக் கூறின் பண்பு அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது என்பதை இக்கட்டுரைகளில் விளக்கியிருந்தார். ஆனாலும், இவரது ஆராய்ச்சி களின் முக்கியத்துவம் அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை. 

>> பாதிரியாராக இருந்துகொண்டே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். 1868-ல் மடாலயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனாலும், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தேனீக்களில் கலப்பினத்தை உருவாக்கினார். வானியல், பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 

>> உயிர் அறிவியலின் அடிப்படையைக் கண்டறிந்தவர், மரபியலின் தந்தை என்று போற்றப்படும் கிரிகோர் யோஹன் மெண்டல் 62-வது வயதில் (1884) மறைந்தார். இவர் மறைந்து வெகுகாலத்துக்குப் பிறகே இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றன. 
- ராஜலட்சுமி சிவலிங்கம் 


No comments:

Popular Posts